NATIONAL

புதிய ஆட்சி மலர்ந்தால் நீதிக்காகவும் ஊழலுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவோம்- நம்பிக்கை கூட்டணி முழக்கம்

ஷா ஆலம், செப் 29- புதிய அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் நீதியை நிலைநாட்டுவதிலும் உழலை ஒழிப்பதிலும் உத்வேகத்துடன் தொடர்ந்து செயல்பட   நம்பிக்கை கூட்டணி (பக்கத்தான் ஹராப்பான்) உறுதி பூண்டுள்ளது.

மக்களின் அதிகாரத்தைத் திரும்ப பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியிலும் நீதியை நிலைநாட்டுவது, ஊழலை ஒழிப்பது, நீதித் துறை உள்ளிட்ட அமைப்புகளை சரி செய்வது போன்றவற்றில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று அந்த கூட்டணி கூறியது.

நம்பிக்கை கூட்டணியின் செயலாளர்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கெஅடிலான் கட்சியைப் பிரதிநிதித்து டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில், அமானா கட்சி சார்பில் டத்தோ டாக்டர் ஹத்தா ரம்லி மற்றும் ஜசெக சார்பில் அந்தோனி லோக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற நம்பிக்கை கூட்டணியின் மாதாந்திரக் கூட்டத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

வலுவான மற்றும் நம்பிக்கையூட்டும் வகையிலான பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக  பக்கத்தான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு உள்ளது என்பதை குறிப்பிட மறுத்த அவர், டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் இனியும் தாக்கு பிடிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

 


Pengarang :