Foto Sumber: Facebook Selangor Royal Office
SELANGOR

கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க வீட்டிலேயே இருங்கள் சிலாங்கூர் சுல்தான் அறிவுரை

ஷா ஆலம், அக் 3- சிலாங்கூர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தில் பொதுமக்கள் காட்டி வரும் அலட்சியம் குறித்து கவலை தெரிவித்த சுல்தான், மக்கள் எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருக்கும் அதே வேளையில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையைக் கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அவசியம் இருந்தாலன்றி ஜன நெரிசல்மிக்க இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று மாநில மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நோய்த் தொற்று அபாயம் அதிகம் உள்ள இடங்களுக்குச் சென்று வந்தவர்கள் அல்லது நோய்க்கான அறிகுறியைக் கொண்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவையும் மதித்து நடக்க வேண்டும் என்றார் அவர்.

பொது இடங்களில் இருக்கும் போது குறைந்தது ஒரு மீட்டர் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். சுவாசக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில் கிருமி நாசினி கொண்டு கைகளையும் கழுவ வேண்டும் என சுல்தான் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், உலு சிலாங்கூர், உலு லங்காட், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கோவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆகக்கடைசி நிலவரங்கள் அச்சமூட்டும் வகையில் உள்ளன. நோய்க் தொற்று பரவல் தொடரை துண்டிப்பதில் மாநிலத்தின் அனைத்து நிலையிலான மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


Pengarang :