Serbuk arang seberat 250kg dilepaskan ke dalam
ECONOMYSELANGOR

பாத்தாங் பெனார் ஆற்றுத் தூய்மைக்கேடு  மேலும் ஒருவர் கைது

சிரம்பான், அக் 13- இங்குள்ள பாத்தாங் பெனார் ஆற்றில்  தூய்மைக்கேடு ஏற்படுவதற்கு காரணமானவர் என நம்பப்படும் மேலும் ஒரு ஆடவர் நேற்று பின்னிரவு கைது செய்யப்பட்டார். 

முப்பது வயதுடைய அந்த ஆடவர்  நேற்று பின்னிரவு 12.30 மணியளவில் கிளந்தான், கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டதாக நீலாய் துணைப் போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. அஸ்ருள் ஹஷிம் முகமது ஷாபி கூறினார்.

அந்த  ஆடவர் குற்றவியல் சட்டத்தின் 430வது பிரிவின் கீழ் விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக  இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இதே சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைதான இருவரின் தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கு அனுமதி கோரி போலீஸ் தரப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்த தகவலையும் அவர் வெளியிட்டார்.

அவ்விரு ஆடவர்களின் தடுப்புக் காவல் அனுமதி நேற்றுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த விண்ணப்பத்தை நாங்கள் செய்தோம். நீதிமன்றமும் எங்களின் விண்ணப்பத்தை ஏற்று வரும் 18ஆம் தேதி வரை அவர்களை தடுத்து வைப்பதற்கான அனுமதியை வழங்கியது என்றார் அவர்.

நீலாய் தொழில்பேட்டை பகுதியிலிருந்து  பாத்தாங் பெனார் ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகள் காரணமாக சுங்கை செமினி மற்றும் புக்கிட்  தம்போய் நீர் சுத்திகரிப்பு மையங்கள் இம்மாத தொடக்கத்தில் மூடப்பட்டன.  இதனால் நான்கு மாவட்டங்களைச்  சேர்ந்த மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கினர்.

 

 


Pengarang :