ECONOMYNATIONALSELANGOR

நீர் மாசுபடுத்தப்படுத்தலுக்கு அபராதத்துடன் கடும் தண்டனை லுவாஸ் சட்டங்கள் திருத்தப்படும்

ஷா ஆலம், செப் 21:- நீர் மாசுபடுத்தப் படுத்தலுக்கு நடப்பில் உள்ள 1999ம் ஆண்டு லுவாஸ் சட்டப்படி அதிகப்படி தண்டமாக 5 லட்சம் வெள்ளிகளே விதிக்கப்படும் வேளையில், அதனை 10 லட்சம் வெள்ளியாகவும் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகவும் உயர்த்தும் வகையில் சிலாங்கூர் நீர் விவகார வாரியம் என்னும் லுவாஸின் சட்டங்களில் மாற்றம் செய்யப் படவுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் மலேசியச் சட்டத்துறையின் அபிப்பிராயத்தைப் பெறும் வண்ணம் அதற்கான சட்டவரைவு நகல் சட்டத்துறை தலைவருக்கு அனுப்பப் பட்டுள்ளது. அந்தச் சட்டத் திருத்தங்களுக்கான பிரேரணை வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.

மாநில மக்களின் நலனைக் காக்க வல்ல இந்தச் சட்டப் பிரேரணை விரைவில் ஏற்று கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப் படவேண்டும் என்று இன்று சிலாங்கூர் மாநிலத் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நீர் விநியோக இடையூறு தொடர்பிலான பத்திரிக்கை மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த நீர் விநியோக இடர்ப்பாட்டில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குக் கட்டணக் கழிவு வழங்குவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில், இது பற்றி விவாதிக்கப் பட்டதாகவும், அது ஒரு சிறந்த மாற்று திட்டமாக அமையாது மாறாக அதிக நீர் விநியோக இடையூறுகளுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றார் அவர். அதைவிட கழிவுக்குச் செலவிடப்படும் நிதியைப் பயன்படுத்தி மீண்டும் இம்மாதிரியான இடையூறுகள் ஏற்படாமலிருப்பதைத் தடுக்க எது-எது தேவையோ அதனைச் செய்யலாம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.


Pengarang :