NATIONALSELANGOR

சிலாங்கூரில் மேலும் இரு இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

ஷா ஆலம், அக் 27- சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் இரு இடங்களில் நாளை தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும்.

உலு லங்காட் மாவட்டத்திலுள்ள பிளாசா ஹெந்தியான் காஜாங் பஸ் நிறுத்த வளாகம் மற்றும் கோல லங்காட்  மாவட்டத்தின் சுங்கை இமாஸ் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவையே அவ்விரு இடங்களாகும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

சுங்கை இமாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 24ஆம் தேதி வரை 1,044 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 சோதனையில் 42 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அதே சமயம் காஜாங் பஸ் நிலைய வளாகத்தில் 909 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 63 பேருக்கு நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனையின் பேரில் அவ்விரு பகுதிகளிலும் நாளை தொடங்கி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

சுங்கை இமாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 1,300 பேரும் பிளாசா ஹேன்தியான் காஜாங் வளாகத்தில் 7,500 பேரும் வசிக்கின்றனர்.

வசிப்பிடத்திலிருந்து வெளியேறக்கூடாது என்ற நிபந்தனை உள்பட நிர்ணயிக்கப்பட்ட செயலாக்க நடைமுறைகளை அப்பகுதி மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலாசார நிகழ்வுகள் தவிர்த்து இதர பொருளாதார நடவடிக்கைகளை வழக்கம் போல் மேற்கொள்ள முடியும் என்று இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.


Pengarang :