SELANGOR

அதிகாரிகளின் துரித நடவடிக்கையினால் நீர் மாசுபடும் சம்பவங்கள் முன்கூட்டியே தடுப்பு

ஷா ஆலம், அக் 29- அரசு அதிகாரிகளின் துரித நடவடிக்கை காரணமாக கடந்த ஆறு நாட்களில் நான்கு நீர் மாசுபடும் சம்பவங்கள்  முன்கூட்டியே தடுக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம், ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம், ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் மற்றும் சுற்றுச் சூழல்துறை  ஆகிய தரப்பினர் உடனடியாக மேற்கொண்ட ஆய்வின் வழி நீர் மாசுபடும் சம்பவங்கள் தடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

ஆக சமீபத்தில் கருப்பு எண்ணெய் கசிவுகளை கண்டு பிடித்தோம். சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் மேற்கொண்ட சோதனையில் சுற்றுவட்டார தொழிற்சாலைகள் அல்லது பட்டறைகளிலிருந்து எந்தவொரு மாசுபாடும் நீரில் கலக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. சுங்கை குண்டாங்கில் எண்ணெய் என நம்பப்படும் கருப்பு நிற திரவம் நீரில் கலந்த மூன்று தினங்களுக்குப் பின்னர் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார் அவர்.

இவை யாவும் வேண்டுமென்ற செய்யப்பட்டது போல் தோன்றுகிறது. எனினும் அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை. நீரை மாசுபடுத்தக்கூடிய மூன்று அல்லது நான்கு சம்பவங்களை அண்மைய தினங்களில் நாம் வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என அவர் மேலும் சொன்னார்,

ஸ்ரீ கெம்பாங்கான், கம்போங் பாரு பலாக்கோங் பகுதியில் உள்ள கால்வாயில் கருப்பு எண்ணெய் கலந்துள்ளது குறித்து நேற்று மாலை பொதுமக்களிடமிருந்து லுவாஸ் புகாரைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கை உரிய நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் பல்வேறு உபகரணங்களைக் கொண்டு அந்த எண்ணெய் சுங்கை பாலாக்கில் கலக்காமல் தடுத்தனர்.

 

 

 

 


Pengarang :