ECONOMYSELANGOR

பொது சுகாதாரத்திற்கு 5.65 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 31- வரும் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது சுகாதாரத்திற்கு சிலாங்கூர் அரசு 5 கோடியே 65 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட       4 கோடியே 60 லட்சம் வெள்ளியை விட இது 23 விழுக்காடு அதிகமாகும்.

கோவிட்-19 நோய்த் தொற்று உள்பட உலகலாவிய நிலையிலும் உள்நாட்டிலும் ஏற்பட்டு வரும் சுகாதாரம் தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்கு இந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவதிலும் சுபிட்சமும் ஆரோக்கியமும் நிறைந்த மாநிலத்தை உருவாக்குவதிலும் மாநில அரசுக்கு உள்ள கடப்பாட்டை இது உணர்த்துகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இருதய நோய்க்கு முக்கிய காரணங்களாக விளங்கும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் அதிகரிப்பு ஆகிய குறைபாடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள 15 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

காச நோய் சிகிச்சைக்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிங்கி காய்ச்சல் காரணமாக இவ்வாண்டில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமிருடின், அந்நோயை கட்டுப்படுத்தும் திட்டங்களை மேற்கொள்வதற்காக 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார்.


Pengarang :