ALAM SEKITAR & CUACASELANGOR

இவ்வாண்டில் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெ. 20 லட்சம் நிதியுதவி

ஷா ஆலம், நவ 5- சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், சிப்பாங் மற்றும் உலு லங்காட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 16 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  230,107 வெள்ளியும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 98,750 வெள்ளியும்  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 23,703 வெள்ளியும் நிலச் சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 வெள்ளியும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை உடனடியாக சென்று சேர்வதை உறுதி செய்வதற்கு ஏதுவாக மாநில அரசின் பேரிடர் நிர்வாகப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

பேரிடர் உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யும் விவகாரத்தில் நிர்வாக நடைமுறைகளை குறைப்பதும்  அந்த நடவடிக்கைகளில் அடங்கும். பாதிக்கப்பட்டவர்கள் அடையாள அட்டை, போலீஸ் புகார், புகைப்படங்கள் மற்றும் கிராமத் தலைவர் அல்லது பெங்குளுவின் உறுதிக் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பித்தால் போதுமானது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சுங்கை ராமால் உறுப்பினர் மஸ்வான் ஜொஹார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மூன்று நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு  உதவித் தொகை சம்பந்தப் பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எனினும், பேரிடர் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து பரிசீலனைக்கான கால அவகாசம் மாறுபடலாம் என்றார்.


Pengarang :