ECONOMYSELANGOR

கல்விக் கட்டண விலக்களிப்பு- 18,000 குயிஸ், யுனிசெல் மாணவர்கள் பயன்பெறுவர்

கல்விக் கட்டண விலக்களிப்பு- 18,000 குயிஸ், யுனிசெல் மாணவர்கள் பயன்பெறுவர்

ஷா ஆலம், நவ 20- சிலாங்கூர் மாநில அறிவித்துள்ள பாயு எனப்படும் பல்கலைக்கழக அடிப்படை கட்டண உதவித் திட்டம் குயிஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும்.

அவ்விரு உயர்கல்விக் கூட மாணவர்களுக்கும் அடிப்படை கல்விக் கட்டண விலக்களிப்பை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது வெளியிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் எட்டாயிரம் குயிஸ் பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெறுவர் என்று அதன் தலைவர் பேராசிரியர் டத்தோ அபு ஹலிம் தமூரி  கூறினார். எனினும், இதில் சம்பந்தப்பட்ட தொகை மற்றும் விதிமுறைகள் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார்.

இந்த கட்டண விலக்களிப்பைப் பெறுவதற்கு மாணவர்கள் எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஆயினும் அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த திட்டத்தின் மூலம் சுமார் பத்தாயிரம் யுனிசெல் பல்கலைக்கழக மாணவர்கள் 600 வெள்ளி வரை கட்டண விலக்கைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யுனிசெல் பல்கலைக்கழக வர்த்தகத் தொடர்புத் துறைத் தலைவர் ஹஸ்ரில் அபு ஹசான் கூறினார்.

அந்த கட்டண விலக்களிப்பை மூன்று கல்வித் தவணைகளுக்கு பிரிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த பாயு திட்டத்தின் கீழ் பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறுவோரின் பிள்ளைகள் அடுத்தாண்டில் சுமார் 600 வெள்ளி  விலக்களிப்பை பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பெறுவதற்காக பல்கலைக்கழகத் தரப்பு விரைவில் மாநில அரசுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :