ECONOMY

ஷா ஆலம், ஜூப்ளி பேராக் மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை- 5,143 பேருக்கு வேலை வாய்ப்பு

ஷா ஆலம், டிச 5- இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் இம்மாதம் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தையில் 5,143 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன.

மாநில மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாக கொண்ட இந்த 2020ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வேலை வாய்ப்பு பயணத் தொடர் இந்த நிகழ்வுடன் இறுதிக் கட்டத்தை அடைகிறது.

தொழில்துறை, சேவைத் துறை, நிபுணத்துவத் துறை கல்வி உள்ளிட்ட துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலை வேலைகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பு வேலை தேடுவோருக்கு கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக இளம் தலைமுறையினர்  மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

வேலை தேடுவோர் சீரான உடையில் தேவையான ஆவணங்களோடு முன்கூட்டியே நேர்முகப் பேட்டிக்கு வந்து விடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த இரண்டு நாள் நிகழ்வில் தங்களுக்கு பொருத்தமான இதர துறைகளில் உள்ள வாய்ப்புகளையும் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள்  முயற்சி செய்யலாம் என அவர் சொன்னார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்பதற்கு ஜோப் மலேசியா வாயிலாக 9,696 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறிய அவர், அவர்களை 34 முதலாளிகள் நேரடியாகவும் இயங்கலை வாயிலாகவும் நேர்காணல் செய்வர் என்றார்.

இந்த வேலை வாய்ப்புப் பயணத் தொடர் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி கோல சிலாங்கூர், கோம்பாக், சுங்கை பூலோ, உலு லங்காட் ஆகிய இடங்களில் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.


Pengarang :