ECONOMYSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் அரசு நடத்திய வேலை வாய்ப்புச் சந்தையில் 111 பேருக்கு வேலை கிடைத்தது

ஷா ஆலம், டிச 9– கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த சிலாங்கூர் வேலை வாய்ப்பு பயணத்தின் வாயிலாக 111 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொண்டவர்களில் 642 பேர் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொண்டவர்களுக்கு இயங்கலை வாயிலாக நேர்காணலில் பங்கு கொள்ளும் புது அனுபவம் கிடைத்ததோடு புதிய சூழலுக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பும் கிட்டியதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்பினை இந்த வேலை வாய்ப்புச் சந்தை ஏற்படுத்தி தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்க அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனைக்கேற்ப நேர்காணலுக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

கடந்த நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 6ஆம் தேதி வரை கோம்பாக், சங்கை பூலோ, உலு லங்காட், ஷா ஆலம், கோல சிலாங்கூர் ஆகிய இடங்களில் வேலை வாய்ப்புச் சந்தை நடைபெற்றுள்ளது. இதில் 105 முதலாளிகள் பங்கு கொண்டனர்.


Pengarang :