NATIONALUncategorized

15 விழுக்காட்டு மலேசியர்கள் கடுமையான சிறுநீரக நோயினால் பாதிப்பு

கோலாலம்பூர், டிச 28– பதினைந்து விழுக்காட்டு மலேசியர்கள் கடுமையான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் காட்டுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் பொரும்பாலோர் தாங்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை உணராமல் இருப்பதுதான் என்று அவர் சொன்னார்.

சிறுநீரக பாதிப்பு தொடர்பில் தொடக்கத்தில் எந்த அறிகுறியும் தென்படாததே இதற்கான காரணமாக உள்ளது. அந்த நோயின் தாக்கத்தை உணரும் போது நிலைமை கடுமையான கட்டத்தை எட்டி விடுகிறது என்று www.mybuahpinggang.com        என்ற அகப்பக்கத்தை இயங்கலை வாயிலாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

அந்த ஆய்வினை மேற்கொண்ட தரப்பினர் யார்? எப்போது அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது போன்ற விபரங்களை டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் தமது உரையில் விரிவாக விளக்கவில்லை.

இந்த அகப்பக்கம் மற்றும்  MYbuahpinggang எனும் முகநூலை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக சிறுநீரக நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதோடு சிறுநீரக செயலிழப்பு சம்பவங்களையும் குறைக்க முடியும் என அவர் சொன்னார்.

இந்த அகப்பக்கத்தை உருவாக்குவதில் பெரிதும் துணை புரிந்த மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுநீரகம் தொடர்பான தகவல்களை நோயாளிகளும் பொதுமக்களும் அறிந்து கொள்ளக்கூடிய ஓரிட மையமாக இந்த விளங்கும். டயாலிசிஸ் மற்றும் நீரிழிவு நோய் தொடர்பான தகவல்களைத் தரும் வகையில் இந்த அகப்பக்கம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.


Pengarang :