Datuk Seri Anwar Ibrahim menyampaikan ucapan ketika program jelajah ke Negeri Selangor di Kediaman Rasmi Dato’ Menteri Besar di Shah Alam pada 7 Ogos 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ECONOMYNATIONAL

வாகனக் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் விஷயத்தில் பெரிக்காத்தான் அரசாங்கத்தின் பொய் வாக்குறுதி- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடல்

ஷா ஆலம், ஜன 2– வாகனக் கடனைத் திரும்பச் செலுத்துவதை சட்டப்பூர்வமாக ஒத்தி வைக்கும் (மோரட்டோரியம்) விஷயத்தில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் கூட்டணி அரசாங்கம் பொய்யான வாக்குறுதியை வழங்கியதை புலப்படுத்துவதாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வாகனங்களுக்கான கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கான ஏற்பாடு அதிக செலவை ஏற்படுத்துவதாகவும் மக்களின் சுமையை மேலும் அதிகப்படுத்தும் வகையிலும் உள்ளதாக அவர் சொன்னார்.

இந்த ஏற்பாட்டைச் செய்வதற்கு விதிக்கப்படும் பல்வேறு நிபந்தனைகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதோடு  கோவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இதனால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிவும் மக்கள் நலனைக் காப்பதில் அக்கறையும் உள்ளதாக கூறிக் கொள்ளும் அரசாங்கம் மக்கள் நலனைப் பாதிக்க கூடிய இதுபோன்ற விஷங்களில் அலட்சியம் காட்டக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டம் (எச்.எஸ்.ஆர்.) ரத்து செய்யப்பட்டதால் அரசாங்கமும் வரி செலுத்துவோரும் சுமக்க வேண்டிய நிதிச் சுமை குறித்து தெளிவான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் டத்தோஸ்ரீ அன்வார் முன்வைத்துள்ளார்.

இ.பி.எஃப். எனப்படும் தொழிலாளர் சேம நிதி வாரியத்தின் முதல் கணக்கிலிருந்து பணத்தை மீட்கும் விவகாரம், கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் ஏற்பாடு, எச்.எஸ்.ஆர். பெருந்திட்டம் ஆகியவை குறித்து 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றும் போது நிதியமைச்சர் வெளியிட்ட விபரங்கள் அனைத்தும் நம்பும்படியாக இல்லை என்றும் அவர் சொன்னார்.

நிதியமைச்சரின் வெளியிட்ட அந்த விபரங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக எந்த முடிவையும் எடுப்பதில் பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ளதை புலப்படுத்துகிறது என்றார் அவர்.

 


Pengarang :