ECONOMYNATIONAL

நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை  அதிகரிக்கலாம்- சுகாதார அமைச்சு கூறுகிறது

ஷா ஆலம், டிச 3-  நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அடுத்து வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு கருதுகிறது.

நாடு முழுவதும் உள்ள கட்டுமானப் பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்நிய நாட்டினர் மீது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட்-19 சோதனை காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

அந்நியத் தொழிலாளர்கள் மீதான கட்டாய கோவிட்-19 சோதனை நேற்று முன்தினம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர், பினாங்கு மற்றும் சபாவில் உள்ள சுமார் எட்டு லட்சம் அந்நியத் தொழிலாளர்கள்  மீது இச்சோதனை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை மொத்தம் 70,000 அந்நியத் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்ட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் கோவிட்-19  நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அவர்  தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களுக்கான ஆர்.டி.கே. ஆண்டிஜென் சோதனைக் கருவிகளை சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் வழங்கிறது. இச்சோதனைக்காக கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் விதிக்கும் கட்டணத்தை முதலாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்

முதலாளிகள் இல்லாத தொழிலாளர்களை குடிநுழைவு இலாகா தடுப்புக் காவல் மையங்களில் தடுத்து வைக்கும் என்றும் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கோவிட்-19 சோதனைக்கான செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


Pengarang :