NATIONALPENDIDIKANSELANGOR

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பள்ளி பேருந்து கட்டணத் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு- கணபதிராவ் அறிவிப்பு

ஷா ஆலம், ஜன 4- சுமார் 3,500 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன்பெறக்கூடிய பள்ளி பேருந்து கட்டணத் திட்டத்திற்காக சிலாங்கூர் அரசு இவ்வாண்டு 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரின் பிள்ளைகள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற முடியும் என்று சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோரின் பிள்ளைகள் இந்த இலவச பள்ளி பேருந்து கட்டணத் திட்டத்தில் பங்கு பெற முடியும். தோட்டப்புற மாணவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

இத்திட்டத்தில் பங்கு பெறத் தகுதி கொண்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கல்வி சார்ந்த அம்சங்களுக்கு மாநில அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்பு நாங்கள் விழாக்கள் சார்ந்த அம்சங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வந்தோம். எனினும் தற்போது இலக்கை மாற்றி பி40 பிரிவினர் நலன் சார்ந்த திட்டங்களை நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.  


Pengarang :