ECONOMYNATIONALPENDIDIKAN

பொது முடக்க காலத்தில் நீண்ட முடி  வைத்திருக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் தடையில்லை

கோலாலம்பூர், ஜன 16- பொது முடக்க காலத்தில் நீண்ட முடியுடன் பள்ளி செல்லும் எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு கல்வியமைச்சு விதி விலக்களித்துள்ளது. இவ்விரு தேர்வுகளையும் எழுதவிருக்கும் மாணவர்கள் இம்மாதம் 20ஆம் தேதி பள்ளிக்குச் செல்லவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட முடி வைத்திருக்கும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

மாணவர்கள் நீண்ட முடி வைத்திருந்த போதும் அவர்களுக்கு  எதிராக ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற முடிவு தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் கல்வியமைச்சு நடத்திய சந்திப்பின் போது எடுக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக முடிதிருத்தும் நிலையங்கள் செயல்படாத அனுமதிக்கப்படாததே இதற்கு காரணம் என்றார் அவர்.

நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் தவிர்த்து  மற்ற மாணவர்களை குறிப்பாக தேர்வு எழுதும் அல்லது தங்கும் விடுதிகளில் இருப்பவர்களை கட்டாய கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும்படி உயர்கல்விக்கூடங்கள் மற்றும் பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என்றும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

கட்டாய கோவிட்-19 சோதனை மேற்கொள்ள மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவது தொடர்பில் தாங்கள் புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :