NATIONALSELANGOR

முன்னாள் தலைமை நீதிபதி துன் சாலே அபாஸ் காலமானார்- சிலாங்கூர் சுல்தான் அனுதாபம்

ஷா ஆலம், ஜன 16- முன்னாள் தலைமை நீதிபதி துன் டாக்டர் முகமது சாலே அபாஸ் இன்று காலமானார். அன்னாருக்கு வயது 91.

நிமோனியா காரணமாக கோல திரங்கானு, சுல்தானா நுர் ஜஹிரா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று விடியற்காலை 3.20 மணியளவில் காலமானாதாக அவரின் புதல்வி  நதிரா கூறினார்.

கோல திரங்கானு, ஜாலான் புசாராவில் உள்ள ஷேக் இப்ராஹிம் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, துன் சாலே அபாஸின் மறைவுக்கு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் அவரின் துணைவியார் துங்கு பெர்மைசூரி நேராஷிகின் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.

மறைந்த துன் சாலே நேர்மையும்  உயரிய கோட்பாடும் கொண்டவராகவும் எந்தவொரு செயலிலும் அரசியலமைப்புக் கோட்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பவராகவும் திகழ்ந்ததாக சுல்தான் குறிப்பிட்டார்.

நாட்டின் நீதித்துறையின் மேன்மையை கட்டிக்காக்கக்கூடியவராகவும் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை  பாதுகாக்கக்கூடியவராகவும் சட்டத்தை பேணிக்காப்பவராகவும் அந்த முன்னாள்  தலைமை நீதிபதி விளங்கினார் எனவும் அவர் புகழாரம் சூட்டினார்.

கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை  நாட்டின் தலைமை நீதிபதியாக துன் சாலே  அபாஸ் பதவி வகித்தார். இவர் 1999ஆம் ஆண்டில் ஜெர்த்தே சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Pengarang :