PBTSELANGOR

கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 7 இந்தியர்கள் நியமனம்

 கிள்ளான், ஜன 17- கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 7 இந்தியர்கள் நியமன பெற்றுள்ளனர்.  2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஈராண்டு தவணைக்கு  பி.கே.ஆர் கட்சி சார்பில் நால்வரும் ஜசெக சார்பில் மூவரும் இந்திய பிரதிநிதிகாளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிள்ளான் நகராண்மைக் கழக ராஜா மஹாடி கூட்ட அரங்கில் கழகத் தலைவர் டாக்டர் அமாட் ஃபட்சிலி அமாட் தாஜுட்டின் தலைமையில் நடைபெற்ற இந்த பதவியேற்புச் சடங்கில் ஜசெக கட்சியை பிரதிநிதித்து  நளன் முனியாண்டி, புஸ்பவள்ளி மகாலிங்கம், டெனிஷ் ராஜா ராஜரத்னம், ஆகியோர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பி.கே.ஆர் கட்சியைப் பிரதிநிதித்து காப்பார் தொகுதி துணைத்தலைவர் மதுரைவீரன் மாரிமுத்து நிமனம் பெற்றுள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டு முதல் நகராண்மைக் கழக உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.  2016 லிருந்து 2018 ஆம் ஆண்டு வரை இப்பதவியை வகித்து வந்த  பி.கே.ஆர் கட்சியின் கிள்ளான் தொகுதி செயலாளரான ஆதி சரவணன் ரெங்கையா ஈராண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அப்பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், கிள்ளான் நகராண்மைக் கழக பொறுப்பிற்கு புதிய முகங்களாக செந்தோசா சட்டமன்ற தொகுதியின் மக்கள் சேவை மைய பொறுப்பாளர்களான மகேந்திரன் மாரிமுத்து, பிரபு முனுசாமி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்த பதவியேற்பு சடங்கிற்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நேரடியாக வந்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த காலங்களில் கிள்ளான் நகராண்மைக் கழக இந்திய பிரதிநிதிகாளாக பதவி வகித்த பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த செபஸ்டியன் ராவ், யோகேஸ்வரி மற்றும் அமானா கட்சியைச் சேர்ந்த சுந்தரம் சுப்ரமணியம் ஆகிய மூவருக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக சில புதிய முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கழகத்தின் சட்ட விதிகளுக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும். மக்களை அணுகும் முறையும் மிக தெளிவுடனும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என்று அமாட் ஃபட்சிலி கேட்டுக் கொண்டார்.  

 


Pengarang :