கோவிட்-19 சம்பவங்கள் குறித்து தகவல் அளிக்கத் தவறினால் அபராதம்- கிளினிக், தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

ஷா ஆலம், ஜன 30- கோவிட்-19 சம்பவங்கள் குறித்து தங்களிடம் நேரடியாக தகவல் தெரிவிக்கத் தவறும் கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா அபராதம் விதிக்கும்.

தொழிற்சாலைகள், சிறைச்சாலைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனை குறித்த தகவல்கள் உடனடியாக அறிவிக்கப்படாததே நேற்றைய நோய் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த பத்து நாட்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவங்களின் வாயிலாக இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையை கண்டறிய முடியும் என்றும் அவர் சொன்னார்.

இப்பிரச்னையை களைவதற்கு ஏதுவாக நோய் கண்டவர்கள் குறித்த தகவல்களை சிக்மா எனப்படும் பொது சுகாதார ஆய்வக தகவல் முறையிடம் அன்றைய தினமே நேரடியாகத் தெரிவிக்கத் தவறும் கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா அபராதம் விதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று இரவு நடத்தப்பட்ட மாநில பாதுகாப்பு மன்றத்தின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

நேற்று நாடு முழுவதும் 5,725 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் அவற்றில் 3,126 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டன.


Pengarang :