PBT

லெம்பா சுபாங் 1, பி.பி.ஆர். வீடமைப்பு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்- மத்திய அரசுக்கு கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, பிப் 1– இங்குள்ள லெம்பா சுபாங் 1.  மக்கள் வீடமைப்புத் திட்ட (பி.பி.ஆர்.) குடியிருப்பாளர்கள்  எதிர்நோக்கி வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய பராமரிப்பு குத்தகையாளரை நியமிக்கும்படி வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பழைய குத்தகையாளரின் ஒப்பந்தம் கடந்தாண்டு இறுதியுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்த குடியிருப்பில் குப்பைகள் அகற்றப்படாதது, கால்வாய்களில் அடைப்பு, அடிப்படை வசதிகளில் பழுது என பல்வேறு பிரச்னைகள் நிலவி வருவதாக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

ஷரிக்காட் இண்ட்ரா ஹர்த்தா சென். பெர்ஹாட் நிறுவனத்தின் பராமரிப்பு குத்தகை ஆண்டு இறுதியில் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்குள்ள எட்டு புளோக்குகளைச் சேர்ந்த சுமார் 6,000 குடியிருப்பாளர்கள் கடுமையான துர்நாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு மாத காலமாக மாற்று குத்தகையாளர் நியமிக்கப்படாத காரணத்தால் அப்பகுதியில் நிலைமை கடுமையாகியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சுக்கு தாம் கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இம்மாதத்திற்குள் குத்தகையாளர் நியமிக்கப்படுவார் என நாங்கள் எதிர்பார்த்தோம். எனினும் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்றார் அவர்.

 

 


Pengarang :