NATIONALSELANGOR

சிலாங்கூரில் 14,000 முன்களப் பணியாளர்களுக்கு உணவு விநியோகம்

ஷா ஆலம், பிப் 2- சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 14,162 முன்களப் பணியாளர்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் வாயிலாக உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 9,822 சுகாதாரப் பணியாளர்களுக்கும் சாலைத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 4,340 காவல் துறையினருக்கும் உணவு வழங்கப்படுவதாக அக்கழகத்தின் சமூக கடப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி முகமது அஸ்ரி  ஜைனால் நோர் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான முன்களப் பணியாளர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த மாநில அரசின் இந்த உணவு உதவித் திட்டம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் மாநிலத்திலுள்ள 12 மருத்துவமனைகள், 10 மாவட்ட சுகாதார அலுவலகங்கள் மற்றும் மாவட்ட சுகாதார துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இந்த உணவு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

சாலைத் தடுப்புகளில் பணியாற்றும் காவல் துறையினருக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 9ஆம் தேதி வரை உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார் அவர்.

கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தின் வழி முன்களப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 30 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 20ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :