MEDIA STATEMENTNATIONAL

எஸ்.ஓ.பி. விதிமீறல்- அபராதத் தொகையை அதிகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை- அன்வார் கூறுகிறார்

ஷா ஆலம், பிப் 3– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஓ.பி விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்கும் பரிந்துரையில் தமக்கு உடன்பாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் அமலாக்க நடவடிக்கைகள் தெளிவானதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முகக்கவசம் அணியாதவர்கள் மீது அமலாக்கத் துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. எனினும், அபராதத் தொகையை உயர்த்தும் நடவடிக்கை பாகுபாடான சட்ட அமலாக்கத்திற்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

அபராதத் தொகையை உயர்த்துவது இப்போதைக்கு முக்கியமல்ல. தெளிவான சட்ட அமலாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் இப்போதைய தேவை. எஸ்.ஓ.பி. விதிமுறையை  மீறும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகுபாடு காட்டப்படுவதாக மக்கள் புகார் கூறுவார்கள் என்றார் அவர்.

நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எஸ்.ஓ.பி. விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக காவல் துறையினர் முன்னதாக கூறியிருந்தனர்.

இதனிடையே, கோவிட்- 19 நோய்த் தொற்று கண்டவர்களை காப்பாற்றுவதற்கு பாடுபட்டு வரும் முன் களப்பணியாளர்களுக்கு அலவன்ஸ் வழங்குவதை தாமதப்படுத்தும் செயலை ஒரு போதும் மன்னிக்க முடியாது என்றும் அன்வார் கூறினார்.

நாட்டில் நோய்த் தொற்று பிரச்னையை சமாளிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்கவில்லை என்றும் கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர்  குற்றஞ்சாட்டினார்.

இவ்விவகாரத்தில் அரசாங்கத்திடம் தெளிவான நிலைப்பாடு  இல்லாத காரணத்தால் பல்வேறு தரப்பினர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. நாம் அவர்களின் முயற்சியை சிறுமைப்படுத்தவில்லை. மாறாக தாமதமான முடிவுகள் நிலைமையை மோசமாக்கி விடும் என அஞ்சுகிறோம் என்றார் அவர்.

 


Pengarang :