SELANGORYB ACTIVITIES

சிலாங்கூரின் அனைத்து தொகுதிகளிலும் கோவிட்-19 பரிசோதனை இயக்கம்- அரசாங்க ஆதரவு கிளப் பரிந்துரை

ஷா ஆலம், பிப் 9- கோவிட்-19 பெருந் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் ஏழை மக்கள் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று சிலாங்கூர் மாநில அரசாங்க ஆதரவு கிளப் தலைவர் எலிசபெத் வோங் கூறினார்.

சுகாதாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் அவர்களுடன் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் பணியை எளிதாக்குவதற்கும் கோவிட்-19 பரிசோதனையின் ஆக்கத்தன்மையை அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக அந்நோய்த் தொற்று தொடர்பான தரவுகளை மத்திய அரசு மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறைந்த பட்சம் 50 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும்  திட்டத்தை எலிசபெத் வோங், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று தொடக்கினர்.

Pengarang :