Orang ramai mematuhi penjarakan fizikal semasa berada di sebuah restoran di sekitar Teluk Kumbar yang dikaitkan dengan kluster Tawar pada 16 Ogos 2020. Foto: BERNAMA
ECONOMYNATIONAL

மேசைக்கு இருவர் என்ற நிபந்தனையுடன் உணவகங்களில் உணவருந்த அனுமதி- இஸ்மாயில் சப்ரி அறிவிப்பு

கோலாலம்பூர், பிப் 10- இன்று தொடங்கி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும், மேசைக்கு இருவர் மட்டும் என்ற நிபந்தனை உள்பட கடுமையான எஸ்.ஒ.பி. நடைமுறைகளை உணவக உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களும் பின்பற்ற வேண்டும்

வாடிக்கையாளர்களின் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதோடு  கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பதற்கு ஏதுவாக மேசைக்கு இரு வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இந்த அனுமதியை தேசிய பாதுகாப்பு மன்றம் வழங்கியுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இதுதவிர, இதுவரை செயல்படாத அனைத்து சில்லறை வியாபாரங்களும் வர்த்தகத்திற்கு திறந்து விடப்படுவதாகவும் அவர் கூறினார். ஜவுளி கடைகள், புகைப்பட கடைகள், வாகன உபரிப் பொருள் கடைகள், கைவினைப் பொருள் கடைகள், சிறார் விளையாட்டுப் பொருள் கடைகள், விளையாட்டு சாதனைக் கடைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.

சில்லறை வியாபாரங்களின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தினசரி மூன்று முறை கடைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் 37.5 டிகிரி செல்சியஸூக்கு அதிகமான உடல் உஷ்ணத்தைக் கொண்டவர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட கடுமையான எஸ்.ஓ.பி. நிபந்தனைகளை  வணிகர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜவுளிக் கடைகளைப் பொறுத்த வரை, வாடிக்கையாளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட வேண்டும். அதே சமயம், அழகு சாதனை நிலையங்களில்  சில்லறை வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி தரப்படும். என்றார் அவர்.

சில்லறை வியாபாரங்களுக்கான எஸ்.ஒ.பி. நிபந்தனைகள் தொடர்பான மேல் விபரங்களை தேசிய  பாதுகாப்பு மன்ற அகப்பகத்தில் காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :