掌管工商、投资及中小企业事务的雪州行政议员拿督邓章钦。
ECONOMYNATIONALSELANGOR

நிதி வளங்களை  நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பீர்- மத்திய அரசுக்கு சிலாங்கூர் கோரிக்கை

ஷா ஆலம், பிப் 10- நிதி வளங்களை நியாயமான முறையில் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்கை பெறுவதற்காக சிலாங்கூர் அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் போராடி வருவதாக முதலீடு, வர்த்தகம், தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

உயர் உற்பத்தி ஆற்றல் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.2 விழுக்காட்டு பங்களிப்பை சிலாங்கூர் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வருமானம்  
22,730 கோடி வெள்ளியாகும். அத்தொகையில் 5,500 கோடி வெள்ளி நமது மாநிலத்திலிருந்து பெறப்பட்டதாகும் என்றார் அவர்.

விஸ்டம் மலேசியா அமைப்பின் ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக நேற்று நடைபெற்ற "வருமான வரி மூலம் கிடைக்கும் வருமானத்தில் மாநிலத்திற்கும் உரிமை உண்டு. இந்தோனேசியாவை மலேசியா முன்மாதிரியாக கொள்ள முடியுமா?" எனும் தலைப்பிலான நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார்.

மத்திய அரசுக்கு  நாம் ஈட்டித் தரும் வருமானத்துடன் ஒப்பிடுகையில்  மத்திய அரசு நமக்கு தரும் தொகை குறைவானதாவே உள்ளது. மாரிஸ் எனப்படும் மலேசிய சாலை பதிவு முறை திட்டம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நான்கு விழுக்காட்டு தொகையை இதற்கு உதாரணமாக கூறலாம் என்று அவர் மேலும் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கு உரிய பங்கு வழங்கப்பட்டால் மாநிலம் தற்போது உள்ளதை விட மேலும் வளர்ச்சியடைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார மீட்சி திட்டம், பி40 தரப்பினருக்கு உதவி, இலக்கவியல் மற்றும் பொருளாதார திட்டங்களின் அமலாக்கம்  சிலாங்கூரை பணக்கார மாநிலம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. 

மத்திய அரசிடமிருந்து குறைவான தொகையை பெற்ற போதிலும் திறன்மிக்க நிதி நிர்வாகம் காரணமாக லட்சக்கணக்கான வெள்ளியை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்றார் அவர்.



Pengarang :