NATIONALSELANGOR

மிதமான அளவில் சீனப்புத்தாண்டை கொண்டாடுவோம்- சுல்தான் தம்பதியர் வாழ்த்து

ஷா ஆலம், பிப் 11– சீனப்புத்தாண்டை மிதமான அளவிலும் எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட் நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றியும் கொண்டாடும்படி சிலாங்கூர் சுல்தான் மற்றும் துங்கு பெர்மைசூரி தம்பதியர் சீன சமூகத்தினரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விழாக்காலத்தில் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கும் அதேவேளையில் அதிகளவிலானோர் ஒன்று கூடுவதையும் தவிர்க்கும்படி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் அல்ஹாஜ் மற்றும் ராஜா பெர்மைசூரி நோராஷிகின்  தம்பதியர் வலியுறுத்தினர்.

சீனப்புத்தாண்டு என்பது குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கான அற்புத தருணமாகும். தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த பெருமிதமிக்க பாரம்பரியம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவதை இளைய தலைமுறையினருக்கு போதித்து வருகிறது.

எனினும், நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் மலேசியர்கள் இவ்விழாவை அடக்கமான முறையிலும் எச்சரிக்கை உணர்வுடனும் கொண்டாட வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாகும் என்று சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் வாயிலாக வெளியிட்ட வாழ்த்துச்  செய்தியில் அவர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டில் கோவிட்19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பல தியாகங்களை புரிந்து வரும் முன்களப் பணியாளர்களையும் இவ்வேளையில் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் நினைவுறுத்தினர்.

நாடு எதிர்நோக்கியுள்ள இந்த நோய்த் தொற்றுப் பிரச்னையை நாம் ஒரு போதும் அலட்சியமாக பார்க்கக்கூடாது என்பதோடு அந்நோய்த் தொற்றை முறியடிப்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை கூறினர்.

இந்த புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீடித்த ஆரோக்கியம், பாதுகாப்பு, வெற்றி மற்றும் சுபிட்சத்தை கொடுக்க பிரார்த்திக்கிறோம் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் சுல்தான் தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.


Pengarang :