MEDIA STATEMENTNATIONAL

நாளொன்றுக்கு 126,000 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர்- அமைச்சர் ஆடாம் பாபா தகவல்

கூலாய், பிப் 14- இம்மாத இறுதியில் கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் தொடங்கியவுடன் நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்கள் வாயிலாக நாளொன்றுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம்  பேர் தடுப்பூசியைப் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

இந்த தடுப்பூசி இயக்கத்திற்கு சுகாதார மையங்கள், தனியார் மற்றும் அரசாங்கம் மருத்துவமனைகள் உள்பட நாடு முழுவதும 600 மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு மையத்தில் ஏழு பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுவர் என்றார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. சுகாதார அமைச்சு நிலையில் நாடு முழுவதும் 600 தடுப்பூசி மையங்களை உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.

ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடும் பணிக்கு ஏழு பேர் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 30 பேருக்கு தடுப்பூசியைச் செலுத்துவர். இதன் வழி ஒரு மையத்தில் தினசரி 210 பேருக்கு தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

இம்மாத இறுதியில் தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் வரை மேற்கொள்ளப்படும் முதல் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் பைசர்-பயேன்டெக் தடுப்பூசியை சுகாதார அமைச்சின் பணியாளர்கள், இராணுவ வீர்கள், காவல் துறையினர் மற்றும் பொது தற்காப்புத் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மாச் மாதம் தொடங்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார் அவர்.


Pengarang :