EVENTNATIONAL

தடுப்பூசி தொடர்பான கூடுதல் அம்சங்கள் மைசெஜாத்ரா செயலியில் இணைக்கப்படும்

கோலாலம்பூர், பிப் 21- தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் அமலாக்கத்திற்கேற்ப தடுப்பூசி தொடர்பான புதிய அம்சங்கள் மைசெஜாத்ரா செயலியில் விரைவில் சேர்க்கப்படும்.

தடுப்பூசிக்கான பதிவு, தடுப்பூசி செலுத்தும் நடைமுறை மற்றும் சுயகண்காணிப்பு ஆகிய அம்சங்களை அந்த செயலி உள்ளடக்கியிருக்கும் என்று சுகாதார அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டு பிரிவின் முதன்மை தலைமை உதவி இயக்குநர் டாக்டர் ஏ.மகேஸ்வர ராவ் கூறினார்.

இந்த புதிய அம்சங்கள் வாயிலாக பயனாளர்கள்  தடுப்பூசித் திட்டத்திற்கு தங்களைப் பதிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அந்த செயலியை பயன்படுத்துவதற்கான வசதியைக் கொண்டிராத தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பதிவு செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.

இந்த பதிவு நடவடிக்கையின் போது பயனாளர்கள் தங்கள் பெயர் மற்றும் அடையாளக் கார்டு எண்களை உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு சில கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். இதன் பிறகு தடுப்பூசியைப் பெறுவதற்கான தேதி குறித்த அறிவிப்பை அவர்கள் பெறுவர் என்றார் அவர்.

தடுப்பூசி தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு ஏதுவாக பயனாளர்கள் இந்த செயலியில் உள்ள அறிவிப்பு விசையை ஆன் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார். ஆர்.டி.எம். மற்றும் பெர்னாமா வாயிலாக கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான விளக்கமளிப்பை வழங்கிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசி நடைமுறை தொடர்பான தகவல்கள் குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் மையம் மற்றும் இலக்கவியல் வடிவிலான தடுப்பூசி சான்றிதழ் போன்றவை நாம் எந்நேரமும் பார்ப்பதற்கு ஏதுவாக அந்த செயலியில் சேமிப்பாக வைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :