MEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- மாமன்னரிடம் தேசிய முன்னணி வேண்டுகோள்

கோலாலம்பூர், மார்ச் 5– நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா அவர்களை தேசிய முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.

2021ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் (அத்தியாவசிய அதிகாரங்கள்) பிரிவு 14(1)(பி) மற்றும் கூட்டரசு அரசியலமைப்பின் ஷரத்து 40(2)இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி  மாட்சிமை தங்கிய பேரரசர் இந்த உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

பொருத்தமானது என கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றத்தைக் கூட்டவோ கலைக்கவோ மாமன்னரால் முடியும் என்று அந்த சட்டப்பிரிவு கூறுவதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைளின் ஆக்கத்தன்மை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று அகமது ஜாஹிட் சொன்னார்.

அதோடு மட்டுமின்றி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் பி40 மற்றும் பி50 பிரிவு மக்களுக்கு 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் பலன்கள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மேற்கொள்ளப்படும் பொருளாதார மீட்சித் திட்டங்களின் ஆக்கத்தன்மை குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என்ற மாமன்னரின் கருத்துக்கு மதிப்பளிக்கும்படி பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று தேசிய முன்னணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


Pengarang :