மகளிரின் பங்களிப்புக்கு சிலாங்கூர் அங்கீகாரம்- மந்திரி புசாரின் மகளிர் தின வாழ்த்து

ஷா ஆலம், மார்ச் 8– மாநில அரசு நிர்வாகத்தில் உயரிய பதவிகளை பெண்களுக்கு வழங்கியதன் வழி மகளிருக்கு உரிய அங்கீகாரத்தை சிலாங்கூர் அரசாங்கம் வழங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.), சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் ஆகிய  துறைகளுக்கு தலைமையேற்கும் பொறுப்பு மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நாட்டில் முதன் முறையாக சட்டமன்ற சபாநாயகர் பொறுப்பை வகிக்கும் வாய்ப்பு மகளிருக்கு மாநில அரசு வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு உயரிய நிர்வாக பொறுப்புகளை வகிப்பதற்கான வாய்ப்பினை சிலாங்கூர் அரசு மகளிருக்கு வழங்கியுள்ளது. ஊராட்சி மன்ற நிர்வாகம், அரசு துணை நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் மகளிர் வகித்து வரும் உயரிய பொறுப்புகள் இதற்கு சான்றாக விளங்குகின்றன என்றார் அவர்.

இன்று அனுசரிக்கப்படும் அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாநிலத்திலுள்ள மகளிர் உரிய வாய்ப்புகளையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கு மாநில அரசு தொடர்ந்து போராடி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

வர்த்தகம், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் நிர்வாகத்துறைகளில் மகளிர் வழங்கிய வரும் அளப்பரிய பங்களிப்பு வழக்கத்திற்கு மாறானது என்பதோடு உயரிய அங்கீகாரத்திற்கும் உரியது என அவர் சொன்னார்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்க்கூடிய செயற்கை சுவர்களை உடைத்தெறிவதில் வர்த்தக சமூகம், அரசு நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :