ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெர்லிங் தமிழ்ப்பள்ளி வாரியத்துக்கு  4 ஆண்டில் 380,000.00 ரிங்கிட்  சிலாங்கூர்  மானியம்

செய்தி  ; சு. சுப்பையா

கெர்லிங்.மே.3- கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வாரியத்துக்கு கடந்த நான்கு ஆண்டில் ரி.ம. 380,000.00 நிதியாக சிலாங்கூர் மாநில அரசு வழங்கியுள்ளது. கடந்த மாநில தேர்தலுக்கு முன்பு சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த துவான் கணபதி ராவ்  ஆண்டு தோறும் ரி.ம. 100,000.00 வழங்கி வந்தார். கடந்த ஆண்டு ரி.ம. 80,000.00 வழங்கினார் என்று கெர்லிங் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் வாரியத் தலைவர் குமரன் மாரிமுத்து தெரிவித்தார்.

இப்பள்ளி வாரியம் வசதி குறைந்த மாணவர்களுக்கு பிரத்தியேக ஆசிரமத்தைப் பள்ளி வளாகத்தில் நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தைக் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. மொத்தம் 22  வசதி குறைந்த இந்திய மாணவர்கள் தற்போது இப்பள்ளியில் தங்கிப் படிக்கின்றனர்.

மாணவர்களுக்கு காலை பசியாறுதல், 10.00 மணிக்குச் சிற்றுண்டி, நண்பகல் உணவு, மாலை 3.00 மணிக்கு மேல் தேநீர் பலகாரம் மற்றும் இரவும் வழங்கப் படுகிறது.

இப்பள்ளி முழு உதவி பெற்ற பள்ளியாகும். தோட்டப்புறப் பள்ளி என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மாணவர் எண்ணிக்கை பெரும் சரிவைக் கண்டது. தொடர்ந்து பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைத் தற்காத்துக் கொள்ள வேண்டி ஆசிரமம் நடத்தத் திட்டமிட்டனர்.

இவ் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த மாணவர்கள், பள்ளிக்கு வறுமையின் காரணத்தால் வர முடியாத இந்திய மாணவர்களைத் தத்து எடுத்துப் பள்ளி ஆசிரமத்தில் தங்க வைத்து முறையான கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிகளை இப்பள்ளி வாரியம் வழங்கி வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் உள்ள எல்லாத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து விடாமல் ஆண்டுதோறும் கணிசமான அளவில் நிதியுதவி செய்து வருகிறது.

கடந்த தவணை சிலாங்கூர் மந்திரி புசாராக டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி பொறுப்பு ஏற்றார். அதே காலக் கட்டத்தில் அரசு ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பு ஏற்ற கணபதி ராவ் இப்பள்ளிக்கு ஆண்டுதோறும் ரி.ம. 100,000.00 கொடுத்து வந்தனர்.

500 மாணவர்களுக்கு மேல் உள்ள பெரிய பள்ளிகளுக்கு  மட்டுமே   ரி.ம. 100,000.00 கொடுப்பது வழக்கம். கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில்  மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பெரிய தொகை  கொடுக்கப்பட்டுள்ளது.  அங்கு 22 வசதி குறைந்த மாணவர்களை ஆசிரமத்தில் தங்க வைத்துப் பராமரிக்க கூடுதல் நிதித் தேவைப்படுவதால் இப்பள்ளிக்கு தற்போது ஆண்டுதோறும்  ரி.ம. 100,000.00 வரை மானியமாகக் கொடுத்து வருகிறது.

இந்த ஆசிரமத்தில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு காற்பந்து, ரக்பி, கூடை பந்து, வலை பந்து, கோல்ப், நெடுந்தூர ஓட்டம், குறுக்கோட்டம் என்று எல்லா விதப் போட்டி விளையாட்டுகளும் இங்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர் கல்வி மற்றும் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்குகின்றனர்.

சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் நிதியுதவி தொடர்ந்து கிடைக்க வேண்டும். முடிந்தால் எங்களுக்குச் சற்றுக் கூடுதலாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் துவான் பாப்பா ரய்டு ஆகியோரிடம் வேண்டுகோள் வைத்தார்.

பெரிய திடல் மற்றும் இரண்டு மாடி கட்டட, கணினி அறை, நூலகம், மாணவர்கள் தங்கும் விடுதி, தலைமை ஆசிரியர் அறை என்று எல்லா வசதிகளுடன் முழு அரசு உதவி பெற்ற முதல் தமிழ்ப் பள்ளியாகக் கெர்லிங் தோட்டத் தமிழ்ப் பள்ளி விளங்குகிறது. தலைமை ஆசிரியர் கலைவாணர் மற்றும் 12 ஆசிரியர்களும் 90 மாணவர்களோடும் வெற்றி நடை போடுகிறது கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றால் அது மிகையாகாது.


Pengarang :