ALAM SEKITAR & CUACASELANGOR

நெல் உற்பத்தியைப் பெருக்க 10 லட்சம் வெள்ளி உதவி நிதி- 2,500 விவசாயிகளுக்கு வழங்கப்படும்

சாபாக் பெர்ணம், மார்ச் 10- நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 2,500 விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

விவசாயிகள் குறிப்பாக சுங்கை பாஞ்சாங் மற்று பாகான் தெராப்பைச் சேர்ந்தவர்கள் தங்களின் உற்பத்தியை பெருக்கிக் கொள்வதற்கு எதுவாக அவர்களுக்கு விதைகள் மற்றும் உரம் போன்றவற்றை வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று விவசாய துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த அறுவடை காலம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. காரணம் முன்பு ஹெக்டர் ஒன்றுக்கு எட்டு டன்னாக இருந்த நெல் உற்பத்தி இம்முறை 2.5 டன்னாக குறைந்து விட்டது என்றார் அவர்.

நெல் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி அவர்களுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஹெக்டருக்கு குறைந்தது ஐந்து டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டால் மட்டுமே அவர்களால் லாபத்தை பார்க்க முடியும் என்று அவர்  மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள பாரிட் 10 தீமோர் விவசாயிகளுக்கு கித்தா சிலாங்கூர் திட்டத்தின் கீழ் உரம் மற்றும் அடிப்படை உணவுப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நெல் உற்பத்தி குறைவுப் பிரச்னைக்கு வரும் ஜூலை மாத த்திற்குள் தீர்வு காணப்படும் எனக் கூறிய அவர், வரும் காலங்களில் ஒரு ஹெக்டருக்கு எட்டு முதல் பத்து டன் நெல் உற்பத்தி செய்யப்படுவது உறுதி செய்யப்படும் என்றார்.


Pengarang :