PBT

வாகன நிறுத்த கட்டண முறையை இலக்கவியலுக்கு மாற்றினால் 600,000 கிலோ காகிதத்தை மிச்சப்படுத்த முடியும்

ஷா ஆலம், மார்ச் 11– ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) செயலி வாயிலாக வாகன நிறுத்துமிடக் கட்டணம் செலுத்தும் முறையை இலக்கவியலுக்கு மாற்றினால் 6 லட்சத்து 34 ஆயிரத்து 994 கிலோ காகித பயன்பாட்டை மிச்சப்படுத்த முடியும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இலக்கவியல் வாகன நிறுத்த கட்டண முறையில் பங்கேற்க 15 லட்சம் பேர் பதிந்து கொண்டுள்ளதன் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக இந்த செயலிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. மலேசியாவில் இதர செயலிகளை விட அதிக பயனீட்டாளர்களைக் கொண்டதாக இச்செயலி விளங்குகிறது. என்றார் அவர்.

பயன்படுத்துவதற்கு எளிதான இந்த செயலி மூலம் வாகன நிறுத்தக் கட்டணங்களை செலுத்த மேலும் அதிகமானோர் முன்வரும் பட்சத்தில் காகித பயன்பாட்டை குறைக்கும் இலக்கை விரைவில் அடையமுடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. கட்டிடத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்றப் பகுதிகளில் கார் நிறுத்துமிடக் கட்டண நிர்வாகத்தின் எதிர்கால இலக்கு எனும் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை கூப்பன்கள் வாயிலாக அல்லது ரொக்கமாக செலுத்தும் நடைமுறையை இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதற்கு மாற்றாக, இலக்கவியல் முறையில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை செலுத்தும் முறை அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அமல்படுத்தப்படும்.


Pengarang :