NATIONALSELANGOR

மக்கள் பிரதிநிதிகள் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு மிரட்டலே காரணம்- கெஅடிலான் குற்றச்சாட்டு

ஷா ஆலம், மார்ச் 14– நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டத்தை கொண்டிருப்பதாக கெஅடிலான் ராக்யாட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அரச மலேசிய போலீஸ் படை, உள்நாட்டு வருமான வரி வாரியம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகிய அமைப்புகளை பெரிக்கத்தான் அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதை இத்தகைய நடவடிக்கைகள் காட்டுவதாக கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

தற்போது விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு தொடர்பாக தனது அரசியல் செயலாளர், சிறப்பு உதவியாளர் மற்றும் தமக்கு அறிமுகமானவர்களை தடுத்து வைத்ததன் மூலம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தம்மைக் குறி வைத்துள்ளதாக டத்தோ சேவியர் ஜெயக்குமார் அண்மையில் கூறியிருந்தார்.

அதோடு மட்டுமின்றி, தம்மை தொடர்பு கொண்ட மூத்த அமைச்சர் ஒருவர் பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் எச்சரித்ததாகவும் சேவியர் தெரிவித்துள்ளார் என்று அறிக்கை ஒன்றில் இஸ்மாயில் கூறினார்.

அவசர காலத்தை காரணம் காட்டி நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கும் தற்போதைய சிறுபான்மை அரசாங்கம் மேலும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு வெகுமதி, நெருக்குதல் மற்றும் மிரட்டல் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கெஅடிலான் உறுப்பினர்கள் தாங்கள் கொண்ட கோட்பாடுகளில் உறுதியாகவும் ரிபோர்மாசி போராட்டத்திலிருந்து வழுவாமலும் ஆசை வார்த்தைகளுக்கும் மிரட்டல்களுக்கும் அடிபணியாமலும் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :