NATIONALSAINS & INOVASI

அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யும் திட்டம் தொடரும்- மலேசியா திட்டவட்டம்

புத்ரா ஜெயா, மார்ச் 16– அஸ்ட்ராஸேனேகா வகை கோவிட்-19 தடுப்பூசியை  கொள்முதல் செய்யும் திட்டத்தை மலேசியா தொடரும் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அந்த தடுப்பூசியினால் உடலில் இரத்த உறைவு ஏற்படுவதாக எழுந்துள்ள புகாரை நிருபிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் சொன்னார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசித் திட்டம் தொடர்பில் அஸ்ட்ரோஸேனேகா நிறுவனம் மலேசியாவுக்கு விளக்கமளித்துள்ளதோடு சில நாடுகளில் பதிவு செய்யப்பட்ட இரத்த உறைவு காரணமாக நேர்ந்த மரணச் சம்பவங்களுக்கு இந்த தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தக்கூடிய வலுவான ஆதாரம் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அஸ்ட்ராஸேனோகா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யும் திட்டத்தில் தற்போதைக்கு  நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார் அவர்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அடாம் பாபாவுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கைரி இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசியைப் பெற்ற சிலருக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து நோர்வே, ஐஸ்லாந்து, தாய்லாந்து போன்ற நாடுகள் அந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

மலேசியாவில் பயன்படுத்தப்படவிருக்கும் கோவிட்-19 தடுப்பூசி மீது தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவு விரிவான ஆய்வை மேற்கொள்ளும் எனறு  சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.


Pengarang :