NATIONALSELANGOR

மக்கள் தொகை பெருக்கம் நீர் பயனீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது- மந்திரி புசார் கருத்து

ஷா ஆலம், மார்ச் 17– சிலாங்கூருக்கு குடிபெயரும் பிற மாநில மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதன் காரணமாக நீர் பயனீட்டில் கடும் விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்நிய நாட்டினர் உள்பட மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை அதிகரிப்பு சிறந்த அடிப்படை வசதிகள் மற்றும் தொழில்துறையின் துரித மேம்பாட்டிற்கு வழி வகுத்துள்ளதாக அவர் சொன்னார்.

வேலை தேடியும் உயர்கல்விக் கூடங்களில் கல்வி கற்பதற்கும்  எழுபதாம் ஆண்டுகள் தொடங்கி பிற மாநிலத்தினர் சிலாங்கூருக்கு வரத் தொடங்கிவிட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மேம்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்ட காரணத்தால் நீர் விநியோகமும் அதற்கேற்ற வகையில் சிறப்பானதாக இருப்பதை உறுதி செய்வதற்குரிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்படுள்ளது என்றார் அவர்.

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கும் இண்டா வாட்டர் குழுமத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கழிவு நீர் குளத்து நீரை தொழில்துறையின் தேவைக்காக மறுபயனீடு செய்வதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தில் ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் இண்டா வாட்டர் குழுமமும் கூட்டாக ஈடுபடுகின்றன.

இத்திட்டத்தின் வாயிலாக நாளொன்றுக்கு 80 லட்சம் லிட்டர் நீரை சுத்திகரிக்க முடியும். இதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் பொதுமக்களின் தேவைக்கும் தொழில்துறையின் தேவைக்கும் நீர் விநியோகத்தை தனித் தனியாக பிரிக்க இயலும் என்று மந்திரி புசார் சொன்னார்.


Pengarang :