NATIONAL

அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க அடையாளக் கார்டு காணாமல் போனதாக பொய்ப் புகார்.

ஷா ஆலம் மார்ச் 17–  அபராதம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அடையாளக் கார்டு காணாமல் போனதை திருடு போனதாக பொய்யான புகார் அளித்த 18 சம்பவங்கள் காஜாங்கில் கடந்தாண்டு பதிவு செய்யப்பட்டன.

அவற்றில் 13  சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டம் 182இன் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சியோருக்கு எதிராக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமது ஜைட் ஹசான் கூறினார்.

இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் இத்தகைய எட்டு பொய்ப் புகார்களை தாங்கள் பெற்றுள்ளதாகவும்  அவற்றில் இரு சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள்  மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேளையில் மற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போன மைகார்டை திருடு போனதாக புகார் செய்யும் யுக்தியை அதிகமானோர் பயன்படுத்துவதை இந்த எண்ணிக்கை காட்டுவதாக கூறிய அவர், தங்கள் அலட்சியப் போக்கினால் அடையாளக் கார்டு காணாமல் போனதற்கு அபராதம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் அவர்கள் இந்த இச்செயலை புரிவதாகச் சொன்னார்.

இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 2,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்பதால் பொய்ப் புகார் அளிப்பதை தவிர்க்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :