ECONOMYNATIONALSELANGOR

சுற்றுலாத் துறைக்கு உத்வேகமளிக்க 13 எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அமல்

கோலாலம்பூர் மார்ச் 17– சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை புதிய இயல்பில் செயல்படுவதற்கு ஏதுவாக 13 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சு வரைந்துள்ளது.

கோவிட்-19 நோய்ப் பரவல் காலத்தில் சுற்றுலாத் துறையினர் தொடர்ந்து தாக்குப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக இந்த எஸ்.ஒ.பி. நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ நான்சி சுக்ரி கூறினார்.

இந்த பெருந் தொற்று காலத்தில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொதுமக்களுக்கும் சுற்றுலாத் துறையினருக்கும் இந்த எஸ்.ஒ.பி ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்றார் அவர்.

தங்கும் விடுதிகள், பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலா நிறுவனங்கள் உள்பட இத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரையும் சுற்றுலா அமைச்சையும் உள்படுத்தும் வகையில் இந்த விதிமுறைகள் அமல் செய்யப்படும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டத் துறையாக  சுற்றுலாத் துறை விளங்குவதை சுட்டிக்காட்டிய அவர், அத்துறை தொடர்ந்து தாக்குப் பிடிப்பதற்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கும் ஏதுவாக அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.


Pengarang :