ECONOMYNATIONAL

முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தேவைப்படாது- பிரதமர் கருத்து

கோலாலம்பூர், மார்ச் 18– தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் அமலாக்கம் காரணமாக எதிர்காலத்தில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் தேவைப்படாது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அறிவியல் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அணுகுமுறையை அரசாங்கம் கையாளும் என்று அவர் சொன்னார்.

தொலைக்காட்சி வாயிலாக பெமேர்காசா எனும் மக்களையும் மற்றும் பொருளாரத்தையும் வலுப்படுத்தும் விவேக திட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்காலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறிப்பிட்ட பகுதியை மட்டும் உள்ளடக்கியிருக்கும் என்பதோடு அது தொற்று மையங்களை மட்டுமே இலக்காக கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெமெர்காசா 20 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அணுகுமுறைகளை உள்ளடக்கியுள்ளதாக கூறிய அவர், அத்திட்டங்கள் கோவிட்-19 நோய்த் தொற்றை துடைத்தொழிப்பதை தலையாய நோக்கமாக கொண்ட மையத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

அடுத்தாண்டு முதல் காலாண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட தடுப்பூசித் திட்டத்தை இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இந்நோக்கத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 300 கோடி வெள்ளியை 500 கோடி வெள்ளியாக உயர்த்துவதற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

 

 


Pengarang :