SELANGORWANITA & KEBAJIKANYB ACTIVITIES

டுசுன் டுரியான் தோட்ட வீடமைப்புத்  திட்டப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்- சிலாங்கூர் அரசு உறுதி

பந்திங், மார்ச் 22- கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பந்திங், டுசுன் டுரியான் தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு திட்டப் பிரச்னைக்கு சிலாங்கூர் அரசு தீர்வு காணவுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் இணக்கப் போக்கு காணப்படுவதற்கு ஏதுவாக அந்த வீடமைப்புத் திட்ட மேம்பாட்டாளர் மற்றும் நில உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த சந்திப்பு தோல்வியில் முடிந்தால் மாநில அரசு நில உரிமை விவகாரத்திற்கு முதலில் தீர்வு காணும். பின்னர் அந்த வீடமைப்புத் திட்டத்திற்கு புத்துயிரூட்டுவதற்கு ஏதுவாக நிலம் கையகப்படுத்தப்படும் என்றார் அவர்.

இங்குள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் வீடமைப்புத் திட்ட நடவடிக்கை குழுவினருடன் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பான பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட அனுபவம் மாநில அரசுக்கு உள்ளதால் இவ்விவகாரத்திற்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அவர் சொன்னார்.

கோல்டன் ஹோப் பிளாண்டாடேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளும் பொறுப்பை பெர்மாய் சென். பெர்ஹாட் நிறுவனம் ஏற்றிருந்தது.


Pengarang :