NATIONALSELANGOR

 காப்பார் நகரில் பொது மருத்துவமனை- சுல்தான் மகிழ்ச்சி

ஷா ஆலம், மார்ச் 31– காப்பார் நகரில் பொது மருத்துவமனையை நிர்மாணிக்க கூட்டரசு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த செய்தி தமக்கு மிகந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

சிலாங்கூரில் குறிப்பாக கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய மருத்துவமனையைக் கட்டுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டதாக அவர் சொன்னார்.

பொதுமக்கள் சிறப்பான மருத்துவ சேவையை பெறுவதற்கு ஏதுவாக புறநகர்ப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதில் கவனம் செலுத்தும்படி தாம் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவை கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் சுல்தான் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, அமைச்சர் ஆடாம் பாபா மேன்மை தங்கிய சுல்தானை இங்குள்ள புக்கிட் காயாங்கான் அரண்மனையில் சந்தித்தார். ராஜா மூடா சிலாங்கூர் துங்கு அமிர் ஷாவும் இச்சந்திப்பில் உடனிருந்தார்.

இதனிடையே, நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைபடி கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும்படி பொதுமக்களை சுல்தான் கேட்டுக் கொண்டார். புனித ரமலான் மாதமாக இருந்தாலும் அந்த தடுப்பூசியைப் பெறுவது குறித்து எந்த சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்

கோவிட்-19 நோய்த் தொற்றை களைவதற்கு ஏதுவாக பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்பதோடு புதிய இயல்பில் வாழ்க்கை நடத்துவதற்கும் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்  கொண்டார்.

 


Pengarang :