NATIONALSELANGOR

இ.சி.ஆர்.எல். திட்டம் தாமதமானதற்கு நாங்கள் காரணமா? சிலாங்கூர் மறுப்பு

ஷா ஆலம், மார்ச் 31- கிழக்குக் கரை இரயில் தடத் திட்டம் (இ.சி.ஆர்.எல்.) தாமதமானதற்கு தாங்கள்தான் காரணம் என சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிலாங்கூர் மாநில அரசு வன்மையாக மறுத்துள்ளது.

அந்த திட்டத்தின் அமலாக்கத்தில் 12 மாதகால தாமதம் ஏற்பட்டதற்கு சிலாங்கூர் அரசுதான் காரணம் என்ற ரயில் லிங்க்க சென். பெர்ஹாட் (எம்.ஆர்.எல்.) நிறுவனத்தின் தலைவரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும் அது வலியுறுத்தியது.

அந்த இரயில் திட்டத்திற்கு தெற்கு வழித்தடத்தை தேர்தெடுப்பது என கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மாநில பொருளாதார நடவடிக்கை மன்றம் எடுத்த முடிவில் சிலாங்கூர் அரசு உறுதியாக இருந்து வருவதாக அடிப்படை வசதிகள் மற்றும் பொது மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

வடக்கு வழித்தடத்தை நாங்கள் தேர்ந்தெடுக்காததற்கு அத்தடம் கோம்பாக் நீர்ப்பிடிப்பு பகுதியை உள்ளடக்கியிருந்ததுதான் காரணம். இத்திட்டத்தை அனுமதித்தால் சுங்கை சிலாங்கூர் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

மேலும், வடக்கு வழித்தடத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இத்திட்டத்திற்கு கூடுதலாக 540 கோடி வெள்ளி செலவாகும். ஆகவே, கூடுதல் செலவினத்தை உட்படுத்தாத தெற்கு வழித்தடத்தை தேர்ந்தெடுப்பது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருந்தோம் என்றார் அவர்.

மக்களுக்கும் மாநிலத்திற்கும் கிடைக்கக்கூடிய அனுகூலங்களை கருத்தில் கொண்டு கூட்டரசு அரசாங்கம் மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க தாங்கள் எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.

தெற்கு வழித்தடத்தை தேர்ந்தெடுக்கும் முடிவு உணர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல. மாறாக, மாநில பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் ஆய்வின் அடிப்படையில்  தொடர்பில் இம்முடிவு எடுக்கப்பட்டது.  ஆகவே, இவ்விவகாரத்தை மத்திய அரசு அரசியலாக்காது என நம்புகிறோம் என்றார் அவர்.

வழித்தடம் தொடர்பில் முடிவு எடுப்பதில் மாநில அரசு ஏற்படுத்திய தாமதப்போக்கு காரணமாக இரயில் திட்டத்தை மேற்கொள்வதில் 12 மாத கால தாமதம் ஏற்பட்டதாக எம்.ஆர்.எல். தலைவர் டான்ஸ்ரீ ஜூக்கி அலி நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டியிருந்தார்.


Pengarang :