MEDIA STATEMENTNATIONAL

18 வயதானவர்களுக்கு வாக்குரிமை மறுப்பு- சட்டமன்ற சபாநாயகர் சாடல்

ஷா ஆலம், மார்ச் 31– பதினெட்டு வயதானவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதை தாமதப்படுத்துவதற்கு நொண்டி சாக்கு கூறுவதை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுய் லிம் வலியுறுத்தினார்.

அந்த ஒத்திவைப்பு நடவடிக்கைக்கு நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலத்தை அரசாங்கம் காரணம் காட்டுவதை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக சாடுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

18 வயதானவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான தீர்மானம் கடந்த 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது 222 உறுப்பினர்களில் 211 பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகவே, இதன் அமலாக்கத்தை ஒத்திவைப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றார் அவர்.

இளைஞர்களைக் கண்டு பெரிக்காத்தான் அரசாங்கம் ஏன் பயப்படுகிறது என்பதுதான் நம் மனதில் எழும் கேள்வியாகும். பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் பல்வேறு காரணங்களை பயன்படுத்துகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பதினெட்டு வயதானவர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் நடைமுறை இவ்வாண்டு ஜூலை மாதம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அதனை அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


Pengarang :