ECONOMYSELANGOR

இளம் மாற்றுத் திறனாளிகளின் ஆற்றலை மேம்படுத்த ‘சேய்‘-யு.ஐ.டி.எம். ஒத்துழைப்பு

கோலாலம்பூர், ஏப் 7- சிலாங்கூரிலுள்ள மாற்றுத் திறனாளி  இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்காக ‘சேய்‘ எனப்படும் சிலாங்கூர் இளைஞர் சமூக அமைப்பும் யு.ஐ.டி.எம். எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் விவேக ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

முதன் முறையாக ஏற்படுத்தப்பட்ட இந்த ஒத்துழைப்புத் திட்டத்தின் வாயிலாக எதிர்காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்தரும் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்று சேய் அமைப்பின் தலைமைச் செயல்முறை அதிகாரி நுருள் அஸ்வா ரோட்சி கூறினார்.

மாற்றுத் திறனாளிகள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆகவே, இரு தரப்புக்குமிடையே நீண்டகால அடிப்படையில் ஒத்துழைப்பை மேற்கொள்ள விரும்புகிறோம் என்றார் அவர்.

தற்போது தீட்டப்பட்டு வரும் திட்டங்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷாவும் தங்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சேய் லீட் எனப்படும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கான போட்டியின் இறுதிச் சுற்று நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத்  தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேய் அமைப்பை பிரதிநிதித்து நுருள் அஸ்வாவும் யு.ஐ.டி.எம். சார்பில் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் ரோட்சியா ஜனாரும் கையெழுத்திட்டனர். 


Pengarang :