ECONOMYNATIONALSELANGOR

சிறு வியாபாரிகளுக்கு உதவ இ-டாப்போர் திட்டம் தொடரப்படும்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப் 12– இலக்கவியல் துறையின் விரிவாக்கத்திற்கேற்ப மேலும் அதிகமான வணிகர்கள்  இ-டாப்போர் திட்டத்தில் பங்கேற்க சிலாங்கூர் மாநில அரசு ஊக்குவிக்கிறது.

பிளாட்ஸ்-2 எனப்படும் பிளாட்பார்ம்  சிலாங்கூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த இ-டாப்போர் திட்டம் நோன்பு பெருநாள் காலத்தில் மட்டுமின்றி எல்லா காலங்களிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உணவுக் கடைகள், உணவகங்கள் மற்றும் சாலையோர உணவு விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இணையம் வழி வியாபாரம் செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நோய்த் தொற்றுப் பரவலுக்குப் பின்னர் இதுவே புதிய வாழ்க்கை முறையாக மாறி விட்டது என்றார் அவர்.

நம்மிடம் உள்ள 14,000 லைசென்ஸ் பெற்ற வணிகர்களில் 300 பேர் கடந்தாண்டு இத்திட்டத்திற்கு பதிந்து கொண்டுள்ளனர். தங்கள் வியாபாரப் பொருள்களை சந்தைப் படுத்துவற்கு இந்த தளத்தை அவர்கள் அனைவரும் பயன்படுத்துவர் என பெரிதும் எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு, பிளாட்ஸ்-2 திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இ-டாப்போர் திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக  கிராப் எக்ஸ்பிரஸ் மற்றும் சிலாங்கூர் இலக்கவியல் விநியோக ஒருங்கமைப்பான செல்டேக் ஆகிய அமைப்புகளுடன் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :