ECONOMYSELANGOR

சிலாங்கூரில் இலக்கவியல் மேம்பாட்டை விரைவுப்படுத்த மூன்று திட்டங்கள்

ஷா ஆலம், ஏப் 17– பொதுச்சேவைத் துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் (ஜி.எல்.சி.) இலக்கவியல் உருமாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக எஸ்.டி.ஐ. எனப்படும் விவேக சிலாங்கூர் இலக்கவியல் அடிப்படைத் திட்டத்தின் கீழ் மூன்று திட்டங்களை ஸ்மார்ட் சிலாங்கூர் டெலவிரி யூனிட் (எஸ்.எஸ்.டி.யு.) அறிமுகப்படுத்துகிறது.

சிலாங்கூர் கிகாபைட் நெட்வேர்க், ஸ்மார்ட் சிலாங்கூர் ஹைபிரிட் டாத்தா சென்டர், லோக்கல் கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவையே அந்த மூன்று திட்டங்களாகும் என்று எஸ்.எஸ்.டி.யு. நிர்வாக இயக்குநர் டாக்டர் ஃபாமி ஙா கூறினார்.

வரும் 2025ஆம் ஆண்டிற்குள் விவேக மாநிலமாக சிலாங்கூரை உருமாற்றும் திட்டத்திற்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

விவேக மாநில செயலாக்கத்திற்கு ஏதுவாக சிறந்த தொழில்நுட்பம், இலக்கவியல் சேவை, செயலி முறை ஆகியவற்றை வழங்குவதில் இந்த மூன்று திட்டங்களும் முக்கிய பங்கினை ஆற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.

விவேக மாநிலத்தை உருவாக்குவதில் முக்கிய அம்சமாக விளங்குவது இலக்கவியல் அடுக்குகளை உருவாக்குதாகும். மனித உடலைப் போல் கணினியும் செயல்படுவதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.

இங்குள்ள விஸ்மா ஏசானில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி தலைமையில் நேற்று  நடைபெற்ற இத்திட்டங்களின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :