MEDIA STATEMENTNATIONAL

தீவிரவாத  ஆதரவாளர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் – புக்கிட் அமான் தகவல்

கோலாலம்பூர், ஏப் 18- குற்றம் நிரூபிக்கப்பட்ட தீவிரவாத கும்பல்களின் ஆதரவாளர்களுக்கு  சிறைத்தண்டனை வழங்குவதோடு மட்டுமின்றி அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக புக்கிட் அமான் தீவிரவாத தடுப்பு பிரிவின் (இ8) முதன்மை உதவி இயக்குநர் டி.சி.பி. நோர்மா இஷாக் கூறினார்.

பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் கண்ணோட்டத்தை சிறப்பு வழிகாட்டி தொகுப்பின் வாயிலாக சரி செய்வதை இந்நடவடிக்கை மையமாக கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

தீவிரவாத கும்பல்களுடன் தொடர்புடைய கைதிகளுக்கு பொறுப்பான சிறைச்சாலை துறை மற்றும் சிறப்பு பிரிவு ஆகியவை இந்த வழிகாட்டி தொகுப்பை தயாரிக்கும் பணிக்கு பொறுப்பேற்றுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தகைய கைதிகளுக்கு தண்டனை விதிக்கும் விஷயத்தில் சிறைத்தண்டனைக்கு  மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படாது. அத்தண்டனை அவர்களின் மறுவாழ்வை மையமாக கொண்டிருக்கும் என்பதோடு அவர்களுடைய நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் அவர்.

கைதிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அக்கைதிகளுக்கு  வர்த்தக நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். சுருங்கச் சொன்னால், விடுதலையானவுடன் சட்டத்திற்கு கட்டுப்பட்ட பிரஜைகளாகவும் சமயத்தையும் மாமன்னரையும் மதித்து நடப்பவர்களாகவும் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் விரிவான அணுகுமுறைகளை உள்ளடக்கி அந்த புனர்வாழ்வு திட்டங்கள் அமல்படுத்ததப்படுகின்றனர் என்றார் அவர்.


Pengarang :