ECONOMYNATIONALSELANGOR

மலேசியா-இந்தியா இடையிலான விமானப் பயணத்திற்கு தற்காலிக தடை- புதன் தொடங்கி அமல்

கோலாலம்பூர், ஏப் 27- இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானப் பயணங்களையும் வரும் 28ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

உருமாறிய கோவிட்-19 நோய்த் தொற்று இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இந்தியாவிலிருந்து பயணிகள் நேரடி விமான சேவை வழியாகவோ வழி மாற்றுப் பயணங்கள் மூலமாகவோ மலேசியா வர அனுமதி மறுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

மலேசியா வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கும் இது பொருந்தும். எனினும், மலேசியர்களுக்கு இந்த நிபந்தனையிலிருந்து விதிவிலக்களிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

செல்லத்தக்க வேலை அனுமதியை வைத்திருக்கும் அந்நிய நாட்டினர், இந்திய பிரஜைகளாக இருக்கும் அனைத்துலக மாணவர்கள், வணிக நோக்கில் நாட்டிற்கு வருவோருக்கும் இந்த தற்காலிக தடை அமல் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வசிக்கும் மலேசியா மாணவர்கள், பணியாளர்கள், மலேசிய பிரஜைகளின் வாழ்க்கை துணை அல்லது பிள்ளைகள் மற்றும் ஆன்மிக நோக்கத்திற்காக இந்தியா சென்றவர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்றும் எனினும், ஆர்ஜிதம் செய்யப்பட்ட மையங்களில்  14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :