ECONOMYSELANGOR

தகுதியுள்ளவர்கள் மட்டுமே உதவி பெறுவதை உறுதி செய்ய புதிய அணுகுமுறை-மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப் 27– பொதுமக்களுக்கு உதவி வழங்குவதில்  முந்தைய அரசாங்கம் கடைபிடித்த ஜனரஞ்சக அணுகுமுறைக்கு மாற்றாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவித் திட்டத்தை சிலாங்கூர் அரசு அமல்படுத்தவுள்ளது.

தகுதி உள்ளவர்கள் மட்டுமே உதவி பெறுவதை இந்த புதிய கொள்கை மூலம் உறுதி செய்ய முடியும் என்று என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மேலும், உதவித் திட்டத்தில் ஏற்படக்கூடிய வீண் விரயத்தையும் குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டுமே பயன்பெறுவதையும் தடுக்க முடியும் என்று அவர் சொன்னார்.

மக்களுக்கு குறுகிய நேர மகிழ்ச்சியைத் தரக்கூடிய திட்டங்களை அமல்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக மக்கள் பரிவு உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் மறுஆய்வு செய்யவிருக்கிறோம் என்றார் அவர்.

உதாரணத்திற்கு, திருமணம் புரிவோருக்கான நிதியுதவித் திட்டத்தை நாம்  அறிமுகப்படுத்தினோம். இத்திட்டம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், விவாகரத்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தினால் என்ன பலன்? ஆகவே அதனை நிறுத்தி விட்டோம் என்றார் அவர்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இல்லத்தரசிகளின் கைவினைப் பொருள் கண்காட்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக மாற்றத்திற்கேற்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினர் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தவிருக்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.

தற்போது உதவி தேவைப்படும் தரப்பிரை மட்டும் நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம்.  வியாபாரத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு உதவுவோம். அதே சமயம், இளையோர் மத்தியில் தொழில் திறன் ஆற்றலை மேம்படுத்துவதிலும் துணை புரிவோம் என்றார் அவர்.

 சிலாங்கூர் மக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா காலக்கட்டங்களிலும் உதவக் கூடிய 42  சமூக  நலத் திட்டங்களை மாநில அரசாங்கம் கடந்த 2008ஆம் ஆண்டில் அமல்படுத்தியது.

கடந்த 2019ஆம் ஆண்டில் அவற்றை எட்டு திட்டங்களாக அரசு மறுசீரமைப்பு செய்தது.  பரிவுமிக்க அன்னையர் திட்டம், சுகாதார பரிவுத் திட்டம், சிலாங்வர் வாரிசு நிதி, இலவச நீர் விநியோகத் திட்டம், மூத்த குடிமக்கள் உதவித் திட்டம், மகளிர் சுகாதாரத் திட்டம், சிலாங்கூர் ஆரோக்கியத் திட்டம் மற்றும் சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டம் ஆகியவையே அத்திட்டங்களாகும்.


Pengarang :