NATIONALPENDIDIKANSELANGOR

யு.பி.எஸ்.ஆர். தேர்வை   அகற்றும் நடவடிக்கைக்கு மந்திரி புசார்  ஆதரவு

அம்பாங் ஜெயா, ஏப் 30- யு.பி.எஸ்.ஆர். எனப்படும் தொடக்கப்பள்ளி மதிப்பீட்டு தேர்வை அகற்றும் நடவடிக்கைக்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையின் வெற்றியை உறுதி செய்வதற்கு ஏதுவாக  இத்தேர்வு  அகற்றப்பட்டதை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேர்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் ஆற்றலை மதிப்பிடும் முறைக்கு மாற்றாக விரிவான புதிய அணுகுமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் கடும் சவால்களை எதிர்நோக்கி  வருகின்றனர். பள்ளிகள் சீராக செயல்படாத காரணத்தால் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

குழப்பம் நிறைந்த ஒரு தலைமுறையை நடப்புச் சூழல் உருவாக்கியுள்ளது. ஆகவே தேர்வை அகற்றும் முடிவுக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று  அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குள்ள தாமான் கிராமாட்டில் புயலால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு தொடங்கி யு.பி.எஸ்.ஆர். தேர்வு முற்றாக அகற்றப்படுவதோடு மூன்றாம் படிவ மாணவர்களுக்கான பி.டி.3 தேர்வு இவ்வாண்டு ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் நேற்று கூறியிருந்தார்.


Pengarang :